பிரதமரின் விவசாயிக்கான கிஸான் திட்டத்தில், விவசாயி அல்லாதவர்களான போலி விவசாயிகளை இணைத்து, அவர்கள் பெயரில் ஆண்டுக்கு 6,000 என்ற கணக்கில் மூன்று தவணைகளாக பணத்தை மோசடி செய்து, முதல் தவணையாக ரூ.2,000 அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்தி 36 ஆயிரத்து 864 போலி விவசாயிகள் பெயரில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கள்ளக்குறிச்சி நகரில் உள்ள பகுதியில் மட்டும் 388 பேர் போலி விவசாயிகள் பெயரில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுப் பணியின்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “இதுவரை மாவட்டத்தில் 66 ஆயிரத்து 864 போலி விவசாயிகளிடமிருந்து, 20 கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் போலி விவசாயிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த முறைகேடுகள் மட்டுமில்லாமல் விழுப்புரம், சேலம், கடலூர் உட்பட சுமார் 14 மாவட்டங்களில் இதே போன்று போலி விவசாயிகள் பெயரில் ஏஜெண்டுகள் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.