வழக்கமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் முடித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பது சீனியர் அமைச்சர் செங்கோட்டையன் தான். ஆனால் இன்று அதிசியமாக, ஜுனியரான சுற்றுச்சூழல் அமைச்சர் பவானி கருப்பண்ணன் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தது மட்டுமல்ல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்துள்ளார். வேறு வழியில்லாமல் ஆசிரியர்களும் விருதைப் பெற்றுக் கொண்டார்கள்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், "தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் நம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களும், பெரும்பாலனோர் முகக் கவசம் அணிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் நம் மாவட்டத்தில் உள்ள 3.42 லட்சம் ரேஷன் அட்டை தார்களுக்கு 19.83லட்சம் முகக் கவசம், ரூபாய் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் வழங்குக இருக்கிறோம். அதன் முதற்கட்டமாக இன்று 1.50 லட்சம் முகக் கவசம் வழங்கப்படுகிறது. கரோனா பரிசோதனை நம்நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. நம் அரசாங்கத்தின் பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. அதே போல்தான், ஈரோடு மாவட்டத்திலும் இறப்பு சதவீதம் மிகக் குறைவு.
அடுத்தபடியாக, தமிழகத்தில் நீர் நிலைகளில் சாயக் கழிவுகள் கலக்கும் பிரச்சனையைத் தீர்க்க ரூபாய் ஆயிரத்து நூறுகோடி திட்ட மதிப்பீட்டில் 9 பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் அளித்துவிட்டது. முதற்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் இந்த பொதுச் சுத்திகரிப்பு திட்டப் பணிகள் துவங்கப்படும். வருகிற மூன்று மாதத்தில் இந்தப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு, உடனே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்" எனக் கூறினார்.
உடன் வந்த ர.ர. ஒருவர் "ஆஹா ரெண்டு ப்ளாண்ட்டுக்கும் சேர்த்து ப்ராஜெக்ட் அமவுன்ட் முன்னூறு கோடி அப்புறமென்ன கணக்குப் போடு... ட்வென்டி ஃபைவ் பர்சென்ட்.." என உற்சாகமாக கமெண்ட் அடித்தார்.