தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று பிரபல ரவுடி சாமி ரவி சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரபல ரவடியான சீர்காழி சத்யாவை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சீர்காழி ரவுடி சத்யா மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் மாமல்லபுரம் அருகே போலீசாரின் என்கவுண்டர் முயற்சியில் சீர்காழி ரவுடி சத்யா சுட்டுப் பிடிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீர்காழி ரவுடி சத்யா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.