சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 17216 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (இன்று, டிச. 17) நடக்கிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது.
![local body election salem district nomination details released collector office](http://image.nakkheeran.in/cdn/farfuture/9TjkO7Lm_QMoU4ykA69TtEgQrrL0Pa6amfgm4dVUT2E/1576527056/sites/default/files/inline-images/c4_2.jpg)
இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடைசி நாளான நேற்று (டிசம்பர் 16, 2019) மட்டும் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 163 பேரும், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1272 பேரும், 385 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 1098 பேரும், 3597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5686 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 17216 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இப்பதவிகளுக்கு கடந்த 14ம் தேதி வரை மொத்தம் 8997 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (டிச. 17) நடக்கிறது. போட்டியிட விரும்பாதவர்கள், வேட்புமனுக்களை வரும் 19ம் தேதி திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
![local body election salem district nomination details released collector office](http://image.nakkheeran.in/cdn/farfuture/T9CfctzaGyPnH_-mY22sOAUycvUgiHoHxhMdCqL1bXg/1576527068/sites/default/files/inline-images/collector_14.jpg)
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் 27.12.2019 தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 30.12.2019ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு வழங்கப்படும். அதன்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 02.01.2020ம் தேதி காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 11.1.2020ம் தேதி நடக்கிறது.