தூத்துக்குடி மாவட்டம், புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அடிப்படையில் சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர். துணிகளுக்கு நீராவி வைக்கும் பழக்கம் என்பதால் நீராவி முருகன் என்றழைக்கப்பட்டவர்.
சகாக்களை சேர்த்துக் கொண்டு சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டுவந்தவன். பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிறவன் நீராவி முருகன். தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் இவன் மீது பல திருட்டு கேஸ்கள் பதிவாகியுள்ளன.
காலப் போக்கில் தன்னுடைய திருட்டுகளை சென்னை, சேலம், ஈரோடு, நாமக்கல் என்று விரிவுபடுத்திய நீராவி முருகன், பல வழக்குகளால் ரவுடி லிஸ்ட்டில் வைக்கப்பட்டவன். கூலிக்கு ஆளை அடிக்கும் கூலிப்படைத் தலைவனாக மாறிய நீராவி முருகன் கொலைச் செயலுக்கு தனது ஆட்களையும் அனுப்பி வந்திருக்கிறான்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் ஒரு டீச்சரிடம் செயின் பறித்ததில் சி.சி.டி.வி. காட்சியின் மூலம் வேளச்சேரி போலீசிடம் சிக்கியதால், இவனது திருட்டு எம்மோவை அறிந்த வேளச்சேரி போலீசார், நீராவி முருகனின் காலை ஒடித்து விட்டதால் சற்று விந்தி விந்தி நடக்கிற நிலைக்கு ஆளானான்.
கடந்த 2011-ன் போது தூத்துக்குடியின் தி.மு.க. மாவட்ட துணை செயலாளரான ஏ.சி.அருணாவுக்கும், வேறு சிலருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வீட்டினருகே ஏ.சி.அருணா வெட்டிக் கொல்லப்பட்டதில் கூலிப்படையாக நீராவி முருகன் முன் நின்று செயல்பட்டு வழக்கில் மாட்டியவன். இந்தக் கொலை வழக்கின் மூலம் தான் நீராவி முருகனின் பெயர் வெளி உலகில் பிரபலமாகி, ரவுடி என்கிற அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. மூன்று கொலை வழக்குகள் மற்றும் 30- க்கும் மேற்பட்ட பிற வழக்குகளில் இருந்ததால், நீராவி முருகனை ஈரோடு போலீசார் பிடிக்க திட்டமிட்ட போது தப்பியிருக்கிறான்.
இதையடுத்தே திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தில் நடந்த 150 பவுன் நகை கொள்ளையில் தொடர்புடைய அவனைப் பிடிப்பதற்காக பழனி எஸ்.ஐ.இசக்கிராஜாவின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் நீராவி முருகன். இந்த டீம் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா தலைமையில் செயல்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மணியாச்சிப் பக்கமுள்ள பாறைக் குட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.இசக்கிராஜா, கடந்த 2020- ன் போது கோவில்பட்டியில் எஸ்.ஐ.யாகப் பணியிலிருந்தவர். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் எஸ்.ஐ. இசக்கிராஜா, ”என்னுடைய காவல் லிமிட்டில், ரவுடியோ, திருடர்களோ இருந்தால் வெளியேறிடுங்க; இல்லன்னா என் துப்பாக்கி தான் பேசும். என்கவுன்ட்டர் தான்” என தன்னுடைய ஃபேஸ்புக்கிலும், பதிவிட்டவர் அதனை ஆடியோவாகவும் வெளியிட்டது சர்ச்சையாகியிருக்கிறது.
ஆனால், அதன் காரணமாகவே அவரது காவல் லிமிட்டில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இந்த நிலையில் தான் எஸ்.ஐ.இசக்கி ராஜாவின் டீம் நீராவி முருகனைப் பல இடங்களில் தேடியுள்ளது. நீராவி முருகனும், எஸ்.ஐ.இசக்கிராஜாவும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீராவி முருகன் பற்றிய துல்லிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் இசக்கிராஜா என்பதால் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் ஏ.டி.எஸ்.பி.லாவண்யா.
கடந்த பிப் 15 அன்று ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் சக்திவேல் வீட்டில் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த நீராவி முருகன், அவரது காரையும் திருடிச் சென்ற மிகப் பெரிய கொள்ளை என்பதால், எஸ்.ஐ. இசக்கிராஜா அவனுக்குப் பொறி வைந்தவர் அவனது செல்போனை டிரேஸ் செய்ததில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை மூன்று நாட்களாகக் காட்டியிருக்கிறது.
அதனால் சற்றும் தாமதிக்காத எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், களக்காட்டில் பதுங்கியிருந்த நீராவி முருகனை வளைத்திருக்கிறார்கள் தன்னுடைய 5001 பதிவு எண் கொண்ட இன்னோவா காரில் தப்பிய நீராவி முருகனை அப்படியே வளைத்த எஸ்.ஐ. இசக்கிராஜா டீம், பகல் 11.00 மணியளவில் நாங்குநேரியின் பக்கமுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தின் பிரிவுச் சாலையின் மீனவன்குளம் யூகலிப்ட்ஸ் மரக்காடுகளுக்குக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் வைத்து விசாரணை என்று போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் நீராவி முருகன்போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் எஸ்.ஐ.முத்துராஜாவால் என்கவுண்டர் செய்ப்பட்டிருக்கிறான். இதில் எஸ்.ஐ.இசக்கிராஜாவுக்கு தலையில் வெட்டு; காவலர்களான சத்தியராஜ், கனகமணிக்கும் வெட்டு விழுந்திருக்கிறது என்கிறார்கள்.
தன்னுடைய பணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் எஸ்.ஐ.இசக்கிராஜா, டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.