Skip to main content

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

தமிழகத்தில், நாளை (11.01.2020) நடைபெற உள்ள ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடவடிக்கைகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

indirect election video chennai high court order


சேலத்தை அடுத்துள்ள அயோத்தியாப்பட்டணம் நத்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். திமுக பிரமுகர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (47). அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 14வது வார்டில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஜன. 8ம் தேதி (திங்கள்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில் புவனேஸ்வரி கூறியிருந்ததாவது: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுவில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன. அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் 14- வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த ஒன்றியக்குழுவின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வரும் 11.1.2020 ம் தேதி (நாளை) மறைமுக தேர்தல் நடக்கிறது. இதில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன்.


ஒன்றியக்குழு வார்டு கவுன்சிலர் பதவிக்கு கடந்த 30.12.2019ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதன் தேர்தல் முடிவுகள் 2.1.2020ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களின்போதும் சிலர் விரும்பத்தகாத, பதற்றத்திற்குரிய, கலவரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்போதே காவல்துறையிடம் வாய்மொழியாக புகார் அளித்தோம். 

indirect election video chennai high court order


இந்நிலையில், மறைமுகத் தேர்தலின்போது, சிலர் வார்டு கவுன்சிலர்களை கடத்திச் செல்லவும், ஒரு தரப்பினருக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும், இன்ன பிற சட்ட விரோத செயல்களை அரங்கேற்றவும் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறைமுகத் தேர்தலின்போது, அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். 


மேலும், வேட்பாளர்கள் மறைமுக தேர்தல் நடைபெறும் இடத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது முதல் வேட்புமனுத் தாக்கல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வரை யாதொரு முறைகேடுகளும் நடைபெறாத வண்ணம் மறைமுக தேர்தலின் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவாக பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு புவனேஸ்வரி மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் ஆதிகேசவலு தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 11.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மறைமுகத் தேர்தல் நடைபெறும் போது தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும்; தேர்தல் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு அம்சங்களைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 


மனுதாரர் தரப்பில் திமுக தலைமை இடத்து வழக்கறிஞர் முத்துக்குமார், மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆஜராகினர். இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் நாளை (11.01.2020) நடக்க உள்ள ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொருந்தும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார். 



 

சார்ந்த செய்திகள்