எழுத்தாளரும், கவிஞருமான பிரான்சிஸ் கிருபா கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இறந்தவர் வலிப்பு நோயினால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்ததை அடுத்து பிரான்சிஸ் கிருபாவை விடுவித்தனர் போலீசார்.
![f](http://image.nakkheeran.in/cdn/farfuture/PcII6t5pLqwfRnfEb9EzNtkVwrDht6RudJxksVwyBnU/1557145934/sites/default/files/inline-images/francis_0.jpg)
கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று இரவு இருவருக்கு இடையே போதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்த நபர் உயிரிழந்தார். இதையடுத்து தள்ளிவிட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என்று தெரியவந்ததும் அவரிடம் போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இறந்துகிடந்தவர் அருகில் அமர்ந்திருந்ததால் மூட்டைதூக்கும் தொழிலாளி புகாரை அடுத்து பிரான்சிஸ் கிருபாதான் அவரை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர் என்றும் கூறப்பட்டது.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/RuZzCjUuQ2MqiXfUY0h_4PW39P8ZpT9ivmAkvpjNsFU/1557146070/sites/default/files/inline-images/Koyambedu.jpg)
இந்நிலையில், மரணம் அடைந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், இறந்து போன அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மார்க்கெட் பகுதியில் பல நாட்கள் சுற்றித்திரிந்ததாக தகவல் வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் வலிப்பு நோயினால் உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த கொலை வழக்கில் இருந்து பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்படுகிறார் என்று கோயம்பேடு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு ஷூட்டிங் சம்பந்தமாக சென்றபோது ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நான் உதவி செய்தேன். அப்போது அவர் இறந்துபோனதும் என்னை போலீசார் சந்தேகத்தில் கைது செய்தனர் என்று தெரிவித்துள்ளார் பிரான்சிஸ் கிருபா.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, சென்னையில் வசித்து வருகிறார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார்.