சேலத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரவுடி வளர்த்தி குமார் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் தாதகாப்பட்டி தர்மலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். ஜன. 13- ஆம் தேதி, அன்னதானப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடி குமார் என்கிற வளர்த்தி குமார், அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளர்த்தி குமாரை அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது 2019- ஆம் ஆண்டு அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் ஆகிய காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
ரவுடி வளர்த்தி குமார், கொலை, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் 40- க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் குமார் என்கிற வளர்த்தி குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்த்தி குமாரிடம் ஜன. 27- ஆம் தேதி, குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது.
வளர்த்தி குமார் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அக்கட்சியில் இணைந்தார். ஆனாலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே இவர் 7 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 8- வது முறையாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ரவுடிக்கும் குண்டாஸ்:
கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சேலம் கிச்சிப்பாளையத்தில் ரவுடி செல்லத்துரை அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இளையா என்கிற இளையராஜா என்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவர், ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். செல்லத்துரை கொலை வழக்கில் ரியாஸ் மாலிக்ஜான் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என கடந்த ஆண்டு டிசம்பர் 12- ஆம் தேதி அவரை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ரியாஸ் மாலிக்ஜான் அளித்த புகாரின்பேரில் ரவுடி இளையா என்கிற இளையராஜாவை கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர் குற்றத்தில் ஈடுபட்ட இளையராஜாவையும் ஆணையர் உத்தரவின்பேரில், காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் கைது ஆணை சார்வு செய்யப்பட்டது.