கடலூர் அருகே உள்ள தாழங்குடா செந்தாமரை நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுப்பிரமணியன்(63). மீனவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். இரண்டு மனைவிகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது இரண்டாவது மனைவியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி காலை தேவனாம்பட்டினத்திலுள்ள தனது முதல் மனைவியின் மகள் இந்துமதியை பார்ப்பதற்காக சுப்பிரமணியன் சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து நிச்சயதார்த்த செலவுக்காக ரூபாய் 10 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு கிளம்பியுள்ளார். ஆனால் அன்றைய தினம் மாலை 3 மணியிலிருந்து சுப்பிரமணியனின் செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் தாழங்குடா கண்டக்காடு ஐயனார் கோவில் அருகே முகத்தில் காயங்களுடன் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் டி.எஸ்.பி.சாந்தி மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் தகராறில் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் சுத்துகுளத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் குகன்(24) மற்றும் முருகன் மகன் ராஜசேகர்(27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
குகன், ராஜசேகரின் சகோதரர் ஆவார். இதில் ராஜசேகர் சுப்பிரமணியன் மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதனால் ராஜசேகர் சுப்பிரமணியனிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க பேசுவதற்காக 22-ஆம் தேதி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே வருமாறு அழைத்துள்ளார். அதையடுத்து சுப்பிரமணியமும் அங்கு சென்றுள்ளார். குகனும் ராஜசேகரும் காரில் சென்று சுப்பிரமணியனை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது ராஜசேகர் சுப்பிரமணியனிடம் அவரது பெண்ணைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வரும் 26-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக கூறிய சுப்ரமணியன், " என் மகளை கொன்று போட்டாலும் போடுவேனே தவிர உனக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் குகன் உடன் சேர்ந்து சுப்பிரமணியனை துணியை முகத்தில் வைத்து அழுத்தி, அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து ராஜசேகர், குகன் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.