தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.
தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டமும், மூன்றாம் இடத்தை பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உதகையில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு அறை கண்காணிப்பாளர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான விசாரணையில் அறை கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு உதவியது உறுதி செய்யப்பட்டது. இதனால் 34 மாணவர்களின் கணிதப் பாடத்திற்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் வெளியாகி உள்ளது.