மதுரையில் கொரியர் டெலிவரி செய்வது போல் தொழிலதிபர் வீட்டில் புகுந்து 32 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் கடந்த 27ஆம் தேதி தொழிலதிபர் வீட்டுக்கு கொரியர் பாய் போல் சென்று மிளகாய் பொடி தூவி பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மதுரை மேல அனுப்பானடி கண்மாய் பகுதியில் கடந்த 27ஆம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள வெற்றிவேல் என்ற தொழிலதிபரின் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல் இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
ஹெல்மெட் அணிந்து கொண்டு கோரியர் கொடுப்பது போல் வந்த நபர்கள் கதவை தட்ட அப்போது கதவை திறக்க வீட்டில் இருந்த வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி, மருமகள் ஆகிய 3 பேர் மீதும் மிளகாய் பொடியை தூவி அவர்களை கட்டிப்போட்டு 47 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவைகள் கொள்ளையக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் மூன்று தனிப்படை அமைத்திருந்தார்.
அதனடிப்படையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தினேஷ் மற்றும் ஜஸ்டின் என இரண்டு பேரை காவல்துறை கைது செய்தது. ஆனால் அதற்கு முன்பே வீரகுமார் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார் இந்த வழக்கில்.
தொழிலதிபர் வெற்றிவேலின் இரண்டு மகள்கள் படிக்கக்கூடிய பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் வீரகுமார். மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் அந்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட நல்ல உறவை பயன்படுத்தி யார் யார் வீட்டில் செல்வச் செழிப்பாக இருக்கிறார்கள் என அறிந்து கொண்டு அவர்கள் வீட்டில் உள்ள பணங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டுவது வீரக்குமாரின் வழக்கமாம்.
கைது செய்யப்பட்ட வீரகுமார் கூறிய தகவலின் அடிப்படையில் மதுரை தினேஷ் மற்றும் ஜஸ்டின் ஆகியோரை கைது செய்தனர். வீரக்குமார், தினேஷ் மற்றும் ஜஸ்டின் ஆகிய 3 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 46 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு 32 லட்சத்தில் 30 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.