சென்னையில் நண்பர்களுடன் தங்கி இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 20 செல்போன்கள் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் திருமணமாகாத, தனியாக மேன்ஷன் அல்லது நண்பர்களுடன் வீடுகளில் அல்லது வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கும் இளைஞர்களை குறிவைத்து அண்மைக்காலமாக திருட்டு அரங்கேறி வந்தது. காற்றோட்டத்திற்காக கதவைத் திறந்து வைப்பது, மொட்டை மாடிக்குச் சென்று உறங்குவது ஆகியவற்றை சாதகமாக்கிக்கொண்டு திருட்டு நடைபெற்றது.
இதுதொடர்பாக வடபழனி, விருகம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், கோயம்பேடு ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில், வடபழனியில் இருசக்கர வாகனம் திருடு போனதாக சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் புகார் பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் இருவர் திருடுவது பதிவாகி இருந்தது.
அவர்கள் யார் என போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர்கள் இருவரும் கடலூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் சிங்காரவேலு என்பதும், அவர்கள் ஏற்கனவே இதுபோன்ற திருட்டு வழக்கில் போலீசில் சிக்கியவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடலூருக்கு சென்ற வடபழனி போலீசார் அந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 செல்போன்கள் 5 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இளைஞர்கள் அசந்து உறங்கும் நேரத்தில் செல்போன்களை திருடியதாகவும் சாவியை எடுத்து இரு சக்கர வாகனங்களை திருடி சென்று கடலூரில் பாதி விலைக்கு விற்றதாகவும் அந்த இருவரும் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.