"பொருட்களின் விலையேற்றம் மக்களுக்கு மேலும் மேலும் துன்பம் தான்" இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என த.மா.கா. இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா கூறியுள்ளார். மேலும் அவரது அறிக்கையில்,
"கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், சில தளர்வுகளுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில பணிகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுமான பணிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கட்டுமான பொருட்களின் விலையோ கடுமையாக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு ஊரடங்கு காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்யும் பொருட்டு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிமெண்ட், செங்கல் மற்றும் எம்.சாண்ட் பொருட்களின் விலை கூடுதலாக உயர்ந்துள்ளது.
சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூபாய்.60 வரைஉயர்ந்து. இப்போது ரூபாய் 420 க்கும், ஒரு யூனிட் எம்.சாண்ட் கூடுதலாக ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் போன்று கம்பிகள், செங்கல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது கட்டுமான பணியில் ஈடுபடும் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் தொழிற்சாலை உட்பட எல்லாமே மூடப்பட்டு வருமானத்திற்கு எந்த வழியும் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மேலும் வேதனையை உருவாக்கியுள்ளது. எனவே தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக இந்த விலையேற்றத்தை உடனே கைவிடுமாறும் இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.