ஆளும்கட்சியான அதிமுகவினர் சென்னையில் சாலையில் வைத்திருந்த பேனர் கீழே விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ லாரியில் சிக்கி பலியானார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக எடுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது, தமிழக அரசு, அரசியல் கட்சிகளை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியது.
அதனைத்தொடர்ந்து, உடனடியாக திமுக, அதிமுக, அமமுக, பாமக என பெரும்பாலான கட்சி தலைமை, கட்அவுட், பேனர் வைக்ககூடாது என தன் கட்சியினருக்கு வேண்டுக்கோள் வைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின், கட்அவுட், பேனர் வைக்ககூடாது, அப்படி வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளமாட்டேன், அதையும் மீறி பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
செப்டம்பர் 15ந்தேதி, திமுகவின் முப்பெரும் விழா திருவண்ணாமலை நகரில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து செப்டம்பர் 15ந்தேதி மதிமுக வின் முப்பெரும் விழா மாநாட்டினை தொடங்கிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி, கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை வரும் திமுக தலைவர், மற்றும் மேல்மட்ட தலைவர்களை வரவேற்க சாலையின் இருபுறமும் பேனர், கட்அவுட், வளைவு வைக்க திமுகவினர் ஏற்பாடு செய்து, அதற்காக வேலைகளில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் செப்டம்பர் 13ந்தேதி, பேனர், கட்அவுட் வைக்ககூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதனை திமுக நிர்வாகிகள் கடைபிடிக்கிறார்களா என முப்பெரும் விழா நடைபெறும் இடம் முதல் ஸ்டாலின் வரும் வழி, தங்கும் இடம் போன்றவற்றை செப்டம்பர் 14ந்தேதி காலை 11 மணியளவில் வலம் வந்து பார்த்தோம்.
முப்பெரும் விழா நடைபெறும் திருக்கோவிலூர் சாலையில், நகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள மைதானத்தில் பிரமாண்டமான பந்தல், கோட்டை வடிவில் முகப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் பேனர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு கம்புகள் நடப்பட்டுயிருந்தன, அவைகள் அப்புறப்படுத்தப்பட்டுயிருந்தன. அதேபோல் சாலையின் குறுக்கே ஆர்ச், வளைவு போன்றவை அமைக்க சவுக்கு கம்புகள் நடப்பட்டுயிருந்தன. ஆனால், அதில் டெக்கரேஷன் செய்யாமல் அப்படியே விடப்பட்டிருந்தன.
கட்அவுட், பேனர் வைக்கத்தானே தடை, மின் அலங்காரம் செய்ய தடை போடவில்லையே என அதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். முப்பெரும் விழா நடைபெறும் இடத்தின் எதிரே ஒன்று, அதே சாலையில் மற்றொன்று என 3 இடங்களில் உதயசூரியன், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்றவர்களின் உருவத்தை 30 அடி உயர உருவமாக்கி மின்அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கறுப்பு, சிவப்பு திமுக கொடி கம்பங்கள் ஸ்டாலின் பயண வழியில் சாலையின் இருபுறமும் நடப்பட்டுவருகிறது. பேனர் வைக்க கட்டப்பட்ட சாரங்கள் அப்படியே இருந்தன. கடைசி நேரத்தில் அனுமதி வைக்க அனுமதி கிடைத்துவிடுமா என காத்துள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் வேலு தரப்பில் விசாரித்தபோது, நகரம் மற்றும் நகரத்தை சுற்றி எங்கெங்கு கட்சி பேனர் வைக்கப்பட்டுள்ளதோ, அவைகள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும் எனச்சொல்லியுள்ளார். அதனை பார்வையிடவும் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.