உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.