Skip to main content

“தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” - அரசுக்கு வேண்டுகோள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

request the government to cancel the fees for traditional sports of Tamils

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணை தலைவர் தலித்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்களை நடத்த காவல் துறைக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ் ஆண்டின் தொடக்கமான சித்திரை, வைகாசி மாதங்களில் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைய இருக்கும். பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோயில் திருவிழாக்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், கரகம் என தமிழர்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகள், கபடி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் கிராமங்கள், நகரங்களில் நடத்தப்படும்.

 

இப்போது செல்போன், கம்ப்யூட்டர் உலகில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மெதுவாக அழியும் நிலையில் உள்ளது. இருப்பினும், தற்போது பாரம்பரியத்தை மறக்காமல் விழாக்களை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விழாக்கள் நடத்துவோருக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள்.

 

இதையெல்லாம் விட கொடுமை என்னவென்றால் நிகழ்ச்சிகள் நடத்த காவல் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் கட்டணமாக கிரேடு 2 போலீஸார் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு வருவதாக இருந்தால் ரூ. 7,206-ம்,  தலைமைக் காவலர் வருவதாக இருந்தால் ரூ.7,665-ம், எஸ்.ஐ. வருவதாக இருந்தால் ரூ.13,347-ம், இன்ஸ்பெக்டர் வருவதாக இருந்தால் ரூ.13,641-ம் செலுத்த வேண்டும் என்று புதிய உத்தரவு உள்ளது. 12 மணி நேரத்துக்கு குறைந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனில் ரூ.2,402 முதல் ரூ.4,547 வரை காவல் துறை அலுவலரின் வருகைக்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இந்தப் புதிய கட்டண முறையால் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது என்பது கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் எனில் பணமே வசூல் செய்யப்பட மாட்டாது. ஒவ்வொருவர் ஒவ்வொரு செலவுத் தொகையை மேற்கொள்ளும் நிலையில் பற்றாக்குறையில்தான் நிகழ்ச்சி நடக்கும். இப்படியிருக்கும்போது புதிய கட்டண முறையால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்துவதில் பெரிதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே வழக்கமான முறையில் விழாக்கள் நடத்தவே பெரும் பொருட்செலவு இருக்கிறது. வெளியூர் அணிகள் வந்து செல்லும் கட்டணத்தில் ஓர் கட்டணத்தை விழா நடத்துவோர் ஏற்பது, அவர்களுக்கு தங்கும் இடம், உணவு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். பரிசுத் தொகைகள், கேடயங்கள், நடுவர்களுக்கு என்று பலவிதமான செலவுகள். இது தவிர, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மேடைகள், மைக், நோட்டீஸ் செலவுகள் என்று பல்லாயிரக்கணக்கில் செலவுகள் கூடுகிறது. விழாக்கள், போட்டிகள் நடத்துவோர் எதிர்பார்த்த தொகை வராவிட்டால், அவர்கள் தங்கள் கைக்காசோ, தங்கள் வீட்டு நகைகளை அடகு வைத்தோ பணத்தை செட்டில் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.

 

தமிழர்களின் பாரம்பரிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்த அரசு மானியமோ உதவிகளோ கோரும் நிலையில் விழா ஏற்பாட்டாளர்கள் இருக்க, அவர்கள் மீது வெந்த புண்ணில் கொதிக்கும் நீர் ஊற்றுவதைப் போல இந்த புதிய அறிவிப்பு உள்ளது. இல்லாவிட்டால், இளம் தலைமுறையினரில் கபடி போன்ற விளையாட்டு வீரர்கள் உருவாகும் நிலை என்பதை மறந்துவிட வேண்டிய நிலை. இன்று ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் தமிழர்கள் தடம் பதிக்கும் நிலையில், புதிய அறிவிப்பால் புதிய வீரர்களை உருவாக்க முடியாத நிலை ஏற்படும்.

 

ஆகவே, இந்த புதிய கட்டண முறையை முற்றிலும் ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். காவல் துறையின் பொறுப்பை கவனிக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணம் வசூல் செய்ய விதிக்கப்பட்டுள்ள முறையை உடனே திரும்பப் பெற வேண்டும். இது தவிர, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நிலையில், இதுபோன்ற கட்டண உயர்வால் நிகழ்ச்சிகள் நடத்துவது குறையும் நிலை ஏற்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும். இது தொடர்பாக விரைவாக அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கபடி விளையாட்டு வீரர்கள் மற்றும் தமிழ் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்