மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத எதுவும் ஆன்மீகமாக இருக்க முடியாது என கோவை சர்ச்சில் சமயத் தலைவர்கள் பேசியது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் பந்தய சாலை அருகே உள்ளது சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் (CSI ALL SOULS) தேவாலயம். இந்த தேவாலயத்தில், சமய நல்லிணக்க நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில் பேராயர் வின்சென்ட், குமர குருபர சுவாமிகள், முகமது இஸ்மாயில், ஜெயின் மகாசபை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து சமய தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது, அவர்கள் பேசும்போது ''இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள், ஜாதிகள், பண்பாட்டுக் கலாச்சாரங்கள், மொழிகள் போன்ற பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். இந்த பன்முகத் தன்மையை உலகில் எந்த நாட்டிலும் நாம் பார்க்க முடியாது.
குறிப்பாக நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் தங்களது தனித்துவமான மத நம்பிக்கையில் வழிபடும் உரிமையும் உள்ளது. மேலும், பிற மதத்தவரின் வழிபாட்டு முறையை நிலைநிறுத்துவதற்கான கடமையும் நமக்கு உள்ளது. அன்பும், ஒத்துழைப்பும் நிறைந்த அமைதியான சுற்றுச்சூழல் இந்த நாட்டில் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத எதுவும் ஆன்மீகமாக இருக்க முடியாது. மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மனிதனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு அவ்வளவு முக்கியத்துவம் கொண்டது என சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நாட்டில் அமைதியை ஊக்குவிப்பதற்காக வெள்ளை நிற பலூன்களை ஒன்றாக வானத்தில் பறக்கவிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.