தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியானது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திடுக என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் "தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கேள்வித்தாள்கள் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாவது அதிர்ச்சியளிக்கிறது.
அரையாண்டுத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் 8 மண்டலங்களில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவகங்களுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுத்தேர்வுகளான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தேர்வுக்கு முன் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் சேலம், தூத்துகுடி சிவகங்கை உள்ளிட்ட. சில மாவட்டங்களில் வெளியானது வேதனையளிக்கிறது. அதுவும் சேர் சாட் என்ற இணையதளம் மூலமாக மாநிலம் பரவியுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சீர்குலைப்பதோடு, இணையதளம் பக்கத்தினைத் தேடி குறுக்கு வழிக்கு தூண்ட செய்கிறது. கடந்த காலங்களில் எப்போதாவது பொதுத்தேர்வில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது உண்டு. ஆனால் தற்போது அரையாண்டுத்தேர்விலே இதுபோன்று நடப்பதால் மாணவர்களின் மனநிலை பாதிப்பதோடு எதிர்காலம் அரசு தேர்வுத்துறையின் மீது நம்பகத்தன்மை போய்விடுமோ அச்சத்தை ஏற்படுத்துவதால் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் " என குறிப்பிட்டுள்ளார்.