கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. அதனடிப்படையில் அண்மையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது.
தொடர்ந்து பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர் நீர்வரத்து காரணமாக மீண்டும் மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது. இதனால் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அணை, சுரங்க மின் நிலையம் மூலம் 21,500 க அடி தண்ணீரும், 16 கண் மழைக்கால நீர் போக்கில் 4,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 30,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.