
நடிகை ஸ்ரீரெட்டி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ’ரெட்டி டைரி’என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் திரைப்பட பிரபலங்கள் தன்னோடு நெருக்கமாக இருந்த போது ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெறும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் தம்மை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது "ரெட்டி டைரி" என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் படக்குழுவினர்,
தித்தர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச்செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ’ரெட்டி டைரி’. இப்படம் ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டம் குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே இத்திரைப்படத்திற்கான காட்சிகள் ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகளை படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் என்று இயக்குநர் அலாவுதீன் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி,
’ரெட்டி டைரி’ படத்தில் நான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தில் என்னுடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இடம்பெறும். ரகசிய கேமிரா மூலம் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் முறையாக அனுமதி பெறப்படும் என அவர் கூறினார்.