புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஜி.எஸ்.டி. இழப்பீடு மாநில அரசுக்கு இருந்தால், மத்திய அரசு அதன் இழப்பீட்டை தரவேண்டும் என்றும் கூறி இருந்தனர். தற்போது மாநில அரசுகள் அதற்கான ரிசர்வ் வங்கி அல்லது வெளி மார்க்கெட்டிலிருந்து பெற்று கொள்ளலாம் என்று தற்போது தெரிவித்துள்ளது. அதுவும் மத்திய அரசின் ஒப்புதலோடு வாங்க வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசானது இழப்பீட்டை கொடுக்கவேண்டும். மத்திய அரசு மாநிலத்திற்கான அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். மாநில அரசுக்குள்ள நிதி அதிகாரம், மக்கள் நல திட்டங்களில் தலையிடுதல், துணை நிலை ஆளுநர் பேச்சை கேட்டு ரேஷன் விவகாரத்தில் பணமாக கொடுங்கள் என்று கூறுகின்றனர். புதுச்சேரிக்கு நீட் வேண்டாம் என அரசு கூறினால் மத்திய அரசு திணிக்கிறது. இந்தி வேண்டாம் என கூறினால் அதனை திணிக்கிறார்கள். மாநில உரிமைகளை படிப்படியாக குறைத்து வரும் மத்திய அரசு தமிழகத்தோடு புதுச்சேரியை இணைத்து நமது அதிகாரத்தை பறிக்க அரசு முயற்சிப்பதாக கூறினேன். இதற்கு எதிர்கட்சியினர் என் மீது வழக்கு போட வேண்டுமென ஊர்வலம் செல்கின்றனர். மத்திய அரசானது தற்போது தேச விரோத வழக்கை போடுவது பா.ஜ.கவின் வேலையாக செய்து வருகின்றது.
சி.பி.ஐ. வைத்து அரசியல் தலைவர்களை மிரட்டுகிறார்கள், இதற்காக சிறை செல்லவும் தயார். ஏற்கனவே இரு சட்டை, இரு வேட்டியுடன் தயாராக இருக்கிறேன். புதுச்சேரி மக்களின் உரிமையை காப்பதற்காக, புதுச்சேரி மக்களுக்காக நான் சிறை செல்ல தயாராக இருக்கின்றேன். இந்த பூச்சாண்டிகளுக்கு பயப்படவில்லை. மாநில உரிமையை மத்திய அரசு தடுப்பதையும், கிரண்பேடியின் தொந்தரவையும் தட்டி கேட்காமல், எதிர்கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.