நியாயவிலை கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும், நியாயவிலை கடை பணியாளர்களை கரோனா மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும், கரோனா காலத்தில் இறந்த பணியாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் நேற்று(10.09.2020) மாநிலம் முழுவதும் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நியாய விலைக்கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 100% குடிமைப் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணியாளர் விரோத போக்கை கை விட வேண்டும், கரோனா தொற்று முன்கள பணியாளர்களுக்கான நிவாரண திட்டத்தில் சேர்க்க வேண்டும், கரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும், சாலை விபத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும், பாக்கெட் முறையில் பொருட்கள் வழங்க வேண்டும், மகளிர் விற்பனையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி, வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.