பரம்பிக்குளம்-ஆழியாறு இணைப்புத்திட்ட கால்வாயிலிருந்து சில தனிநபர்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி அத்திட்டத்தின் முன்னாள் தலைவரான கே.பரமசிவம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால்வாய் மூலமாக பெறப்படும் தண்ணீர் அனைவருக்கும் சமமாக பங்கிட வேண்டும். சிலர் அரசிடமிருந்து அனுமதி பெற்று தண்ணீர் எடுத்தாலும் சட்டவிரோதமாக அதிக தண்ணீரை உறிஞ்சுவதால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “நீர்வள ஆதார அமைப்பின் தலைமை என்ஜினீயர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்ய போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து சிலர் குழாய்களை அகற்றி விடுகின்றனர். ஆய்வு முடித்து சென்றபிறகு, மீண்டும் தண்ணீர் திருடுகின்றனர்.
இதுபோன்ற இடங்களில் மின்இணைப்பைத் துண்டிக்க மின்வாரியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் பொதுவான தண்ணீரை சட்டவிரோதமாக எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக தண்ணீர் எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் எடுப்பதற்கு உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வறட்சி காலங்களில் தண்ணீருக்காக மக்கள் எவ்வளவு அவதிப்படுகின்றனர் என்பதை சொல்லத் தேவையில்லை.
அவ்வளவு மதிப்பு மிக்க தண்ணீரை முறையாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் 30 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளதால், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நீர் வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் அங்கு சில தனிநபர்களுக்கு தண்ணீர் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறுஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். மின்இணைப்பை துண்டிக்க வேண்டும்.
குறிப்பாக தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது. மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி அவர்களை கருப்பு பட்டியிலில் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்களை துல்லியமாக கண்டுபிடிக்க ‘டிரோன் கேமராக்களை’ பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் இந்த உத்தரவை கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இதற்காக விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என தெரிவித்தார்.