முத்தூட் பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 9 பேரும் நாளை (25/01/2021) ஓசூர் அழைத்து வரப்படுகின்றனர்.
ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையில் நேற்று முன்தினம் (ஜனவரி 22- ஆம் தேதி) அன்று துப்பாக்கி முனையில் ரூபாய் 12 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதேபோல், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹைதராபாத் அருகே சமசத்பூர் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் உள்பட 5 பேரை கைது செய்தனர். லாரியைப் பின் தொடர்ந்து வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கிய காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அதையடுத்து, காரியில் இருந்த நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து 25 கிலோ தங்க நகைகள், பணம், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்து, ஹைதராபாத் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் கைதான 9 பேரையும் காவல்துறையினர் நாளை (25/01/2021) ஓசூருக்கு அழைத்து வருகின்றனர். பின்பு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.