திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். மும்பையில், பலதரப்பட்ட தொழிலில் முதலீடு செய்யும் நிறுவனத்தை நடத்திவருபவர் தொழிலதிபர் மிட்டல் ஷா. மிட்டல் ஷாவுடன் இணைந்து ஒரு புதிய தொழிலில் ஈடுபட கோபிநாத் முடிவு செய்துள்ளார். அதற்காக கோபிநாத் 20 லட்சம் ரூபாயை முதலீடும் செய்துள்ளார்.
வெகு நாட்களாகிய பிறகு தன்னுடைய பங்கை திருப்பித்தர மிட்டல் ஷாவை கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். இருந்தும் அவர், எந்தவித தொகையும் திருப்பித் தராததால் மன இறுக்கத்தில் இருந்துள்ளார் கோபிநாத். இந்நிலையில் தொழில் விஷயமாக மிட்டல் ஷா, சென்னை வந்திருந்திருக்கிறார். அவரிடம் பேசி பணத்தை வாங்கித் தருவதாக சென்னையைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் கோபிநாத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முனியப்பன், மெட்டல் ஷாவை சென்னையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.
திருச்சிக்கு வந்து சேர்ந்த மிட்டல் ஷாவை ஹோட்டல் பிளாசாவில் தங்க வைத்துள்ளார். அதன்பிறகு கோபிநாத் மற்றும் முனியப்பன் இருவரும் சேர்ந்து மிட்டல் ஷா மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி, கொல்ல முயற்சி செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிய அவரை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்றுள்ளனர். இந்நிலையில், மிட்டல் ஷா கூச்சலிட்டுள்ளார். அதனால், அவரை காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு விட்டு கோபிநாத், முனியப்பன் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
சாலையில் இருந்த மிட்டல் ஷாவை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.