Skip to main content

அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த உடலை எலி கடித்து குதறிய சம்பவத்தால் பரபரப்பு...

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

rat bit the body in the mortuary of the government hospital

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரிலுள்ள கிழக்கு தெருவினை சேர்ந்தவர் சுரேஷ். அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.  ஆவியூரை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகியோர் இருவரும் அந்த வீடு கட்டும் பணியில் பல மாதங்களாக ஈடுபட்டுள்ளனர்.  

 

நேற்று முன்தினம் சுவற்றில் சிமெண்ட் பூசுவதற்காக அந்த வீட்டின் சுவரில் சாரம் கட்டி சிமெண்ட் பூசும் வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாரத்தில் உள்ள கயிற்றை கட்ட முற்படும்போது கட்டிடத்தின் அருகில் சென்ற உயர் மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கப்பட்டு ஆறுமுகம் முருகேசன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். 

 

அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்றவர்கள் அவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர், ஆறுமுகம் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். முருகன் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தபோன ஆறுமுகத்தின் உடலை அந்த மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.

 

நேற்று காலை ஆறுமுகம் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக சவக்கிடங்கில் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் வெளிய எடுத்துள்ளனர். அப்போது ஆறுமுகத்தின் மூக்கு மற்றும் கால் கட்டைவிரல் ஆகிய பகுதிகளை எலி கடித்து குதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஊழியர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு தெரியவந்தது. 

 

உடனே அவர்கள் இறந்த உடலைக் கூட பாதுகாப்பாக வைக்க முடியாத மருத்துவமனையின் நிர்வாக அலட்சியத்தை கண்டு கோபம் அடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார், இறந்துபோன ஆறுமுகம் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவர் உடலை பாதுகாப்பாக வைக்க தவறி எலி கடிக்க காரணமாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு ஆறுமுகம் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்து ஆறுமுகம் உடலை பெற்று சென்றுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக திருக்கோவிலூர் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்