Skip to main content

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நக்கீரன் ஆசிரியர்!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
stalin

 

கருத்து சுதந்திரம் வெற்றி பெறுவதற்காகவும்,  தனது விடுதலைக்காகவும் குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் நக்கீரன் ஆசிரியர்.

 

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின்  துணைச்செயலாளர் செங்கோட்டையன்,  நக்கீரன் இதழின் ஏப். 22 இதழில் ‘பூனைக்கு மணிக்கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற வாசகத்துடன் ஆளுநரின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு கட்டுரை வெளியாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின் அடிப்படையில்  நக்கீரன் ஆசிரியர் மீது பிரிவு ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  நேற்று காலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.   கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.   பின்னர்,  திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நக்கீரன் ஆசிரியர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.    ஊடக பிரதிநிதியாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நேரில் ஆஜராகி 124 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு  எதிராக வாதாடினார்.  ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் நீதிபதி கோபிநாத். வழக்கில் இருந்து ஆசிரியரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

 

சிந்தாரிப்பேட்டை காவல் துணை ஆனையர் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரை பார்க்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.    இந்த நிலையில் நக்கீரன் ஆசிரியரை சந்திக்க மு.க.ஸ்டாலின் வரும் தகவல் வந்தது.   அதற்குள் நக்கீரன் ஆசிரியரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டதால் மருத்துவமனைக்கு சென்றார் ஸ்டாலின். அவருடன் துரைமுருகன்,  ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் வந்தனர்.  திமுகவினரும் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.  

 

நக்கீரன் ஆசிரியரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், ’’உடனடியாக நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்துவிட்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்.   நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த ஆட்சி பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும்’’என்று எச்சரித்தார்.


இந்நிலையில் இன்று ஸ்டாலினை சந்தித்து தனது விடுதலைக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் நக்கீரன் ஆசிரியர்.

 

சார்ந்த செய்திகள்