18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நண்பகல் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 297 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 227 இடங்களிலும், மற்றவை 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கடும் சவால் கொடுத்துள்ளது. இந்தியா கூட்டணியால் பாஜகவிற்கு எதிர்பார்த்த அளவிற்கான வெற்றி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. ராமநாதபுரத்தில் அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம் சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போன்றே ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஐந்து பேர் வேட்பாளராக களமிறங்கி இருந்தனர். இதில் ஐந்து பன்னீர் செல்வங்களும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 37,731 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் ஒச்சப்பன் பன்னீர்செல்வம் 416 ஓட்டுகளும், ஒய்யாதேவர் பன்னீர்செல்வம் 206 ஓட்டுகளும், ஒய்யாரம் பன்னீர்செல்வம் 187 ஓட்டுகளும், ஒச்சதேவர் பன்னீர்செல்வம் 79 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.