தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அமைதி ஊர்வலம் நடத்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 வது நாள் போராட்டத்தின் போது போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எதிப்பு போராட்டக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்து கடைவீதியில் தொடங்கி வீதி வீதியாக அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடந்து ஊர்வலத்தின் முடிவில் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த பதாகை முன்பு மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இது பொன்ற துயரச் சம்பவங்கள் எங்கும் நடக்க கூடாது என்றும் மத்திய மாநில அரசுகள் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். கடைவீதியில் ஸ்டெர்லைட் ஆலை முதலாளி மற்றும் மத்திய, மாநில நிர்வாகத்தை கண்டித்தும் பதாகை வைக்கப்பட்டிருந்தது.
அதே போல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் திருமயம் எம்.எல்.ஏ வும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ரகுபதி, முன்னால் எம்.எல்.ஏ ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க உள்ளிட்ட பல கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
அதே போல புளிச்சங்காடு கைகாட்டியில் தமிழர்நலம் பேரியக்கம் மாநில பொதுச் செயலாளர் திருமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.