Skip to main content

ஆயிரம் ஆண்டுகள் அரிதான அரிகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலாளர் இரா. நரசிம்மன், இணைச் செயலாளர் க. முத்துக்குமார் ஆகியோர் சோழபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது.

 

''சிவகங்கை தொல்நடைக் குழுவினர் சோழபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் சோழபுரத்தில் இருந்து நாலு கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோவிலில் இச்சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

அரிகண்டம்

 

தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ நோயிலிருந்து மீளவோ காளி தேவியிடம் வேண்டிக்கொண்டு போரில் வெற்றிபெற்ற பிறகு அல்லது உடல்நலம் பெற்ற பிறகு தன் தலையை தானே அரிந்து உயிர் விடுதலே அரிகண்டமாகும். நவகண்டம் என்பது ஒன்பது இடங்களில் வெட்டி, உடம்பை ஒன்பது கண்டங்களாக்கி உயிரை துறப்பது என்பர்.

 

அரிகண்டம், நவகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் கலிங்கத்துப் பரணியில் இடம் பெற்றுள்ளன.அவி பலி,தலைப்பலி,தன்பலி, அரிகண்டம் ஆகிய பெயர்களில் இவை வழங்கப்பெறுகின்றன. அரிகண்டமாக தன் தலையை வெட்டி உயிர் கொடுத்தவருக்கு உதிரக் காணி வழங்கப்படுவதும் உண்டு, காளையார்கோவில் ஒன்றியம் மல்லலில் இவ்வாறான சோழர் காலக் கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அரிகண்ட சிலை

 

இரண்டடி உயரமும் ஒன்றரை அடி அகலம் உடைய சிலையானது ஒரு காலை முன் வைத்து மற்றொரு காலை பின் வைத்து மடக்கி அமர்ந்த நிலையில் இடது கையில் தன் தலைக் குடும்பியை பிடித்துக் கொண்டும் வலது கையில் வாளால் தன் தலையை அரிவதுமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காதில் காதணிகளும் கையில் முன்கையில் வளையல்களும் பின் கையில் தோடாவும் கழுத்தில் பதக்கம் போன்ற ஆபரணமும் இடையில் ஆடையும் அணிந்து வளமுடையவராக  காட்டப்பட்டுள்ளதால் இவர் படைத்தலைவனாக இருந்திருக்கலாம். மேலும் இச்சிற்ப அமைப்பைக் கொண்டு இது பதினோராம் நூற்றாண்டு சிற்பமாகக் கருதலாம்.

 

நடுகல் வீரர்கள்

 

இச்சிலைக்கு அருகிலேயே நடுகல் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. மூன்று வீரர்கள் வரிசையாக நிற்கின்றனர். இதில் அனைவரும் வலது கையில் குத்துவாளை கீழ் ஊன்றியவாறும் ஒருவர் மட்டும் இடது கையில் வில்லை பிடித்தவாறும் காட்டப் பெற்றுள்ளது. முழுமையான வடிவமைப்பு தெரியாதவாறு சிலை மிகவும் சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

 

ஆயிரம் ஆண்டு பழமையான காளி சிலை

 

பிடாரி என்பது ஊர் வழக்கு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. காளியே பிடாரியாக வழங்கப்படுவதாக தொல்லாய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிலின் பின் பகுதியில் கருவறையில் இருந்த பழமையான சிலைகளை  வைத்துள்ளனர், அதில் ஒரு சிலை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்கலாம். இச்சிலை அமர்ந்த நிலையில் எட்டு கரங்களுடன் காளியாக காட்சி தருகிறது. இச்சிலை முன்பாகவே தலைப்பலி நிகழ்ந்திருக்கலாம். ஆயிரம் ஆண்டு பழமையை தாங்கிக்கொண்டு ஊர் எல்லையில் அரிதான அரிகண்ட சிற்பம் அமைதி காத்து நிற்கிறது.

 

யானைச் சிற்பம்

 

கோவில் வளாகத்தில் யானை சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இது மிகவும் சிதைந்து பழமை வாய்ந்ததாக உள்ளது. மேலும் திரிசூலமிட்ட எல்லைக்கல் ஒன்றும் நடப்பட்டுள்ளது. கோவிலின் வெளியே சமீபத்திய விளக்குத்தூண் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இக்கோவிலில் அரிகண்டம் மற்றும் நடுகல் வீரர்கள் சிற்பங்கள் சேர்த்து சப்த கன்னிமாராக வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது'' இவ்வாறாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்