நூற்றாண்டை கடந்த பாம்பன் ரயில் பாலம் சேதம் அடைந்து வரும் நிலையில், அதன் அருகே புதிய பாலம் அமைப்பதற்கு மத்திய அரசு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. பல்வேறுக் கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 1ம் தேதியிலிருந்து புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் துவக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![rameshwaram pampan bridge construction](http://image.nakkheeran.in/cdn/farfuture/EhDpdCCEn0H5AcvEyxzv6vwVts1TqZ9puhCWmPuS7-Q/1572265554/sites/default/files/inline-images/fbhg.jpg)
ராமேசுவர தீவினை இணைக்கும் பொருட்டு பாம்பன் கடல் பகுதியில் கடந்த 1914-ம் ஆண்டு சுமார் 2 கி.மீ நீளத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. 105 வருடங்களாக போக்குவரத்துக் காரணியாக இருந்த பாம்பன் பாலத்தின் தூக்குப்பாலம் வலுவிழுந்ததாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 83 நாட்கள் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், பழைய பாலத்திற்கு அருகிலேயே ரூ.250 கோடி செலவில் புதியபாலம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மண்பரிசோதனை மற்றும் பலக் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் பதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக புதிய பாலம் அமைப்பதற்கான கட்டுமான பொருட்கள் பாம்பன் பகுதியில் வந்திறங்கிய நிலையில் கடலுக்குள் காங்கிரட் பில்லர் அமைக்க இரும்புக்கம்பிகள் வெட்டும் வேலை துவங்கியுள்ளது. இதனையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து புதிய கட்டுமான பணிகள் துவங்கும் எனத் தெரியவருகிறது. இதனால் ராமேசுவர தீவு பகுதி மக்கள் மட்டுமின்றி யாத்ரகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.