ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம் - காளியம்மாள் தம்பதியர். இவர்கள் இருவரும் அங்குள்ள கண்மாய் மற்றும் குளங்களில் மீன் பிடித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். சிவானந்தம் தனது மீன்பிடி தொழில் மூலம் மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.
குடும்பத்தின் சூழலை உணர்ந்து சுரேஷ் கண்ணனும் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வந்துள்ளார். படிப்பை முடித்த சுரேஷ் கண்ணன், வளைகுடா நாட்டில் செயல்பட்டு வரும் கப்பல் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே தனது சகோதரிகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பெற்றோருக்கு சொந்தமாக வீட்டையும் கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது பெற்றோரிடம் இனி நீங்கள் பணிக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் ஓய்வு எடுங்கள் எனக் கூறி உள்ளார். மேலும் இதய நோயாளியான தனது தந்தையிடம் கொளுத்தும் கோடை வெயிலில் வியாபாரத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் கூறி உள்ளார். இருப்பினும் உழைக்க வேண்டும் என்ற விட முயற்சியால் சிவானந்தமும் நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் தந்தையின் உழைப்பு மற்றும் விடா முயற்சியை உணர்ந்த சுரேஷ் கண்ணன், தனது தந்தையின் வேலையை எளிதாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளார். அப்போது தான் தந்தைக்கு கார் வாங்கிக் கொடுத்தால் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதுடன் எளிதில் சிரமமின்றி வெளியில் சென்று மீன் விற்று வரலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதன்படி 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏசி கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அதன் மூலம் மீன் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து தந்தைக்கு கார் வாங்கிக் கொடுத்த மகனின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.