கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருக்கின்றதா என்பதை ஆராய்ச்சி செய்து அறிக்கை அனுப்ப வேண்டுமென தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தொல்லியல் துறையினர் இன்று ஆய்வை துவங்கியுள்ளனர்.
தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜசோழனின் உடல் கும்பகோணம் அருகே உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான அடையாளங்களாக அங்கு இருக்கும் பழங்கால கற்களை காட்டுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். அந்த இடத்தை வணங்கியும் வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ராஜராஜ சோழனின் சமாதி உடையாளூரில்தான் உள்ளதா என அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்களின் அதிகமாகப் பேசப்பட்டவர் முதலாம் ராஜராஜ சோழன். கி.பி. 985 ஆம் ஆண்டு முதல் 1014 ஆம் ஆண்டு வரை தஞ்சை, கொற்கை, உள்ளிட்ட இடங்களை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளான்.
மிகச்சிறந்த மன்னனாக வாழ்ந்த ராஜராஜ சோழன், வரலாற்றுச்சிறப்புமிக்கதும், சிற்பக்கலை நிறைந்ததுமான தஞ்சை பெருவுடையார் பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட பல கோயில்களை கட்டியுள்ளான். தஞ்சை பெரியகோயில் கட்டிடக்கலையின் சாதனை சான்றாக, உலகளவில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால் வெளிநாட்டவர்கள் இந்த கோவிலைக் கண்டு அதிசயித்து வருகின்றனர். அப்படி உலக புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழனின் சமாதி உடையாளூர் என்கிற குட்கிராமத்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர். சிலர் தஞ்சையில் தான் உள்ளது என்கின்றனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் ,"கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், வங்காள விரிகுடா அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராஜராஜ சோழனுக்கு மிகப் பெரிய சிலை அமைக்க வேண்டும்". என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் எல்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அமர்வு தமிழக அரசுக்கு அகழ்வாராய்ச்சி மூலம் ராஜராஜசோழன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் உடையாளூர் தானா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், தங்கதுரை, பாஸ்கர், லோகநாதன், சக்திவேல், ஆகியோர் கொண்ட ஐவர் குழு உடையாளூர் கிராமத்திற்கு வந்தனர். அங்கு ராஜராஜ சோழன் சமாதி அமைந்திருப்பதாக கூறப்படும் இடத்தை சுற்றி தானியங்கி விமானம் 3 மூலம் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பூமிக்கு அடியில் ஒரு மீட்டர் தூரம் அளவிற்கு என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை தற்பொழுது ஆய்வு செய்து அவற்றை படங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
முதற்கட்ட ஆய்வு பணிகள் இன்று துவங்கியிருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.