ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில் 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும் என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பினார்.
இந்த தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சில தெளிவுகள் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ளது. 3 மாத காலத்திற்குள் இதுகுறித்து தங்களுடைய கருத்தை மத்திய அரசு மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் மனுவை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசு தலைவர் நிராகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு தன் கருத்தை வலியுறுத்தி அவர்களது விடுதலைக்கு முயற்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.