சில கடிதங்கள் படிப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்; வேதனையாகவும் இருக்கும். இரண்டும் கலந்த ஒரு கடிதத்தைப் படிக்க நேர்ந்தது.
கட்சியின் பெயரில் சமத்துவம் இருக்கிறது. அதன் மாவட்ட செயலாளர் அக்கட்சியின் தலைவருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்திலோ, ‘சாதிய ரீதியாக’ கட்சி நிர்வாகிகள் நடந்து கொள்வதாகவும், தலைவரிடம் முறையிட்டும் பலனில்லை. சாதிய ரீதியிலான தாக்குதல்களைச் சமாளிக்க முடியாததால், சமத்துவ ரீதியாக தன்னால் செயல்பட முடியவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் லலித்குமார் ராஜா, கட்சியின் நிறுவனர் சரத்குமாருக்கு எழுதிய கடிதத்தில்தான், இத்தனை ‘சாதி ரீதியிலான’ குமுறல்கள்!
நாம் லலித்குமார் ராஜாவிடம் பேசினோம். “நான் ராஜினாமா கடிதம் அனுப்பினேன். நேற்று மாநில நிர்வாகி பாக்கியநிதி பேசினார். பொறுமையாக இருக்கச் சொன்னார். தலைவர் சரத்குமாரின் கொள்கையும் செயல்பாடுகளும் சரியாகத்தான் இருக்கின்றன. கட்சி நிர்வாகிகளின் அணுகுமுறைதான் சரியில்லை. நாடார் சொந்தங்கள் என்றும் சரத்குமார் பாசறை என்றும் ரசிகர்கள் என்றும் கூறி, கட்சியில் சமத்துவத்துக்கு வேட்டு வைக்கிறார்கள். அதனால்தான், கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன்.” என்றார் ஆதங்கத்துடன்.