மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு சென்ற மாணவர்களுக்கு நூதன தண்டனை அளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை. அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம், அந்த மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாணவர்களை நீக்கியது. மேலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தொடர மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
அதன் காரணமாக மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு நூதன தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தனர். அதன்படி விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தை கல்லூரி மாணவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை மது விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். மேலும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு வரும் பார்வையளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர்களின் செயல்பாடுகளை விருதுநகர் டவுன் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்களை மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை பெற்று மீண்டும் கல்லூரியில் சேர்க்கவும் நீதிபதிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து ஆகஸ்ட் 19- ஆம் தேதி கல்லூரி முதல்வர், மனுதாரரகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.