திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது.
சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரைப் பற்றி பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கியிருப்பார்.
ஒருமுறை என் படத்துக்கு கலைஞர் வசனம் எழுதுகிறார் என்று சொன்னதும் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அவரிடம் நான் சொல்வதற்காக சென்றேன். ஏனென்றால், எனக்கு அப்பொழுது தமிழ் பெருசா தெரியாது. இதை அவரிடம் கூறிய போது சிவாஜி நடித்த சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன் யார் நடிக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன் என்று பதில் சொன்னார்.
வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த போது பத்திரிகையாளர்கள் அவர்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்? என்று கேட்க அவர் இரட்டை இலை என்று சொல்லிவிட்டார். அது அன்றைக்கு பெரிய செய்தியாகி விட்டது. இப்போது அந்த நடிகருக்கு கலைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ப்ரிவுயூ ஷோவுக்கு செல்வதில் சங்கடமாக இருந்தது. அதனால் எப்படி போவது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று கூறிவிட்டு தவிர்க்க நினைத்தார். ஆனால் அவர் வரவேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். வேறு வழியில்லாமல் அந்த நடிகரும் தியேட்டருக்கு வந்த போது, ‘வாங்க குளிர் காய்ச்சல்னு சொன்னீங்க...சூரியன் பக்கத்தில உட்காருங்க சரியாகிடும்’னு சொல்லி அந்த நடிகர பக்கத்தில் உட்கார வைத்தார். அந்த நடிகர் வேற யாரும் இல்ல, நான் தான்” என்று கூறினார்.