சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் அண்மையில் அமைச்சர் எ.வ.வேலுவின் 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் 'திமுக ஆலமரம் போன்றது யாராலும் சாய்க்க முடியாது' என்று பேசியது குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''இப்படித்தான் தெலுங்கானாவில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தெலுங்கானா ஆலமரம் என்று சொன்னார்கள். அந்த ஆலமரமே சாய்ந்து தான் போச்சு. ஆந்திராவில் இன்னொரு ஆலமரம் சாய்ந்து போச்சு. அதனால் அரசியலில் ஆலமரம் இதை அசைக்கவே முடியாது, விழுதுகள் உள்ள மரம் இது விழவே விழாது என்றெல்லாம் சொல்ல முடியாது.
அதைவிட அதிக விழுதுகளைக் கொண்ட ஆலமரமாக மற்ற கட்சிகள் வந்து கொண்டிருக்கலாம். நடிகர் ரஜினிகாந்த் இப்போது திமுகவில் ஒரு பெரும் புயலை உருவாக்கி இருக்கிறார். சுனாமியையே உருவாக்கி இருக்கிறார் என்பது தான் என்னுடைய கருத்து. நான் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது ஓமந்தூரார் கல்லூரி அந்த வளாகத்தில் உள்ள துரைமுருகனின் வீட்டு முன்னாடி மணல் போட்டிருப்பார்கள். கதிர் ஆனந்த், நான், ரகுமான்கானின் பையன் சுபீர் ஆனந்த் எல்லாம் மணலில் விளையாடிக் கொண்டிருப்போம். அந்த அளவிற்கு துரைமுருகன் சீனியர். அவர் வீட்டு முன்னால் மணலில் கபடி விளையாடி, மணல் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த நான் ஒரு கட்சியின் தலைவராகி, இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராகி மீண்டும் கட்சியைக் பலப்படுத்த வந்திருக்கிறேன்.
துரைமுருகன் எவ்வளவு சீனியர். அப்படிப்பட்ட சீனியர் ஸ்டுடென்டாக இருக்கும் முடியாது. ஆசிரியராகத்தான் இருந்திருக்க வேண்டும். இதனால் தான் வாரிசு அரசியல் வேண்டாம் என்று நாங்கள் சொல்கிறோம். கட்சிக்காக கடுமையாக உழைத்த துரைமுருகன் ஸ்டாலினுக்கு கீழ்ப்படிதலில் இருக்க வேண்டும் என்றால், அடுத்து உதயநிதிக்கு கீழ்ப்படிதலில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். உதயநிதி சொல்லுகிறார் 'துரைமுருகன் கருத்தெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று. அப்பொழுது ரஜினி கருத்தை சீரியஸாக எடுத்துக் கொள்வீர்களா? டி.ஆர்.பாலு பாவம். டி.ஆர்.பாலுவின் முகத்திலும் சிரிப்பையே நான் பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் எல்லாம் ரொம்ப சீனியர். அவரிடம் இருந்த பதவியை பிடுங்கி கனிமொழியிடம் கொடுத்தாச்சு. துரைமுருகனுக்கு வரவேண்டியதை பிடுங்கி ஸ்டாலினிடம் கொடுத்தாச்சு. அடுத்து உதயநிதியிடம் கொடுக்கப் போகிறார்கள்'' என்றார்.