சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் மனிதம் காத்து மகிழ்வோம் என்ற நிகழ்ச்சி பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிகழ்ச்சியானது திடீரென ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிக எளிமையான முறையில் நிகழ்வு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்து முடிந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்தபோது, ரஜினி மக்கள் மன்றத்தில் அதிக அளவு உறுப்பினர்களைச் சேர்த்தனர். 2020ல் அரசியலுக்கு இனி எப்போதும் வரப்போவது இல்லை எனச் சொன்னதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு போயினர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 95 சதவீதத்தினர் வேறு கட்சிகளுக்கு போகவில்லை.
இந்நிலையில், வறுமையில் வாடும் ரஜினி ரசிகர்களின் குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என கடந்த ஆண்டு முடிவு செய்தார் மா.செ சோளிங்கர் ரவி. வாழ வீடு கூட இல்லாத 5 நபர்களுக்கு, 600 சதுர அடியில் வீடு, 5 பேருக்கு மாவு அரைக்கும் இயந்திரம், 5 பேருக்கு முச்சக்கர ஸ்கூட்டர், ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரம், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம் 5 நபருக்கு, இரண்டு பேருக்கு பெட்டிக்கடை என சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
இந்த நிகழ்ச்சியை சென்னையில் நடத்த முடிவு செய்து ரஜினிகாந்திடம் அனுமதி வாங்கி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மனிதம் காத்து மகிழ்வோம் என்கிற தலைப்பை நடிகர்கள் சிவகார்த்திகேயன், லாரன்ஸ், இயக்குநர் கார்திக்சுப்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கார்த்திக் சுப்புராஜ், பி.வாசு, ரவிக்குமார், நடிகர் ராகவா லாரன்ஸ், ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ராக்லைன். வெங்கடேஷ் போன்றவர்களோடு பாஜக கூட்டணியில் உள்ளவரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு, அதிமுகவை சேர்ந்த சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாஜக ஆதரவாளர் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் இருந்தன.
நிகழ்ச்சிக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்கிற தகவல் கிடைத்தது. இப்போதைய நிலையில் பிரமாண்ட நிகழ்ச்சி வேண்டாம். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல், ரசிகர்களுக்கு வீணான செலவு, நிகழ்ச்சி நடைபெறும் போது, அல்லது வழியில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நன்றாக இருக்காது. யாராவது அரசியல் பேசினால் கூடுதல் சிக்கல் என்பதால் ரஜினி நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்துவிட்டார். இது ரசிகர்களை கவலைப்படச் செய்தது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த ரஜினி மன்றச் செயலாளரான ரவியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து அதே மார்ச் 26ஆம் தேதி சோளிங்கரில் வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள் என உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி புதியதாக கட்டப்பட்ட வீடுகளில் குத்துவிளக்கேற்றி வைத்து அந்த குடும்பத்தாரிடம் சாவியை ஒப்படைத்துள்ளனர். அதோடு நலத்திட்ட உதவிகளை சம்பந்தப்பட்ட ரசிகரின் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர். எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.