Skip to main content

சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பகுதி கண்டுபிடிப்பு! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Discovery of the passage mentioned in the Sangam literature!

 

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த இரு ஊர்களின் தடயங்களை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இங்கு அகழாய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்ககால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது. 

 

அழகன்குளம் தான் இவ்வூர்கள் என சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லை. இந்நிலையில் பெயர் ஒற்றுமை கொண்டு தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த வே.ராஜகுரு, வை.வெற்றிவேல், வே.சேர்மராஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். தீர்த்தாண்டதானம் கடற்கரையிலிருந்து மருங்கூர் 2 கி.மீ. தூரத்திலும், நேர்வழியில் ஓரியூர் கோட்டை 5 கி.மீ. தூரத்திலும் உள்ளன.

 

Discovery of the passage mentioned in the Sangam literature!

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; மருங்கூர் மகாகணபதி ஆலயத்தின் மேற்கில் கண்மாய் அருகிலுள்ள திடலிலும், கண்மாய் உள்ளேயும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கு கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், அறுத்த சங்குகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், அரைப்புக் கல், சீன நாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள், சுடுமண் உறைகிணறின் உடைந்த ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 


மேலும் மருங்கூரின் கடற்கரைப் பகுதியான தீர்த்தாண்டதானம் சிவன் கோயிலின் ஏழு கல்வெட்டுகளில் நான்கு இங்கு தங்கி இருந்த வணிகக்குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் சூழ்ந்த பாம்பாற்றின் ஒரு உப்பங்கழியும் உள்ளது. மருங்கூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் தீர்த்தாண்டதானம் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் சங்க காலம் முதல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை வணிக மையமாக இருந்ததை அறியலாம். எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம் இதுதான் என்பது உறுதியாகிறது. 


அதேபோல் ஓரியூர் கோட்டை மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சேதுபதி அரண்மனை உள்ள வட்டவடிவமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
 

இக்கோயிலின் தெற்கில் ஆறடி உயரத்தில் ஒரு செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் உள்ள ஒரு முழு செங்கலின் நீளம் 23 செ.மீ., அகலம் 14 செ.மீ., உயரம் 4 செ.மீ. ஆகும். இது இடைக்கால செங்கல் அளவில் உள்ளதால் பிற்காலப் பாண்டியர்களால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் எச்சமாக இருக்கலாம். இங்கு சங்ககாலத்தில் மண்கோட்டையும், பாண்டியர் காலத்தில் செங்கல் கோட்டையும், சேதுபதிகள் காலத்தில் அரண்மனையும் பயன்பாட்டில் இருந்த தடயங்கள் உள்ளன. மேலும் இப்பகுதி தற்போதும் அதிக நெல்விளையும் இடமாகவும், செம்மண் நிலமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஓரியூர் கோட்டை மகாலிங்கசுவாமி கோயில் பகுதி தான் ஊணூர் என்பது உறுதியாகிறது. இவ்விரு ஊர்களிலும் அகழாய்வு செய்து அதன் சிறப்பை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்