சாத்தான்குளம் காவல் நிலையக் கொட்டடியில் போலீசாரால் முரட்டுத் தாக்குதலுக்குள்ளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் அங்கிருந்து கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இரண்டு நாள் ரண, மரண வேதனையை அனுபவித்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஐ.ஜி. சங்கர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி.யினர் வேகமாக விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார்களைக் கைது செய்து கொலைவழக்குப் பதிவு செய்தனர்.
அதன்பின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி, இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்டின் ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா, இன்ஸ்பெக்டர்களான அனுராக் சின்கா, பூரண்குமார், எஸ்.ஐ.க்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், காவலர் அஜய்குமார் மற்றும் காவலர்கள் சைலேந்திரகுமார், குழுவினர் நேற்று (11/07/2020) தூத்துக்குடியிலுள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வழக்கின் ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்தனர். சி.பி.சி.ஐ.டி.யின் சங்கர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் அருகிலுள்ள திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
எட்டுப் பேர்களடங்கிய சி.பி.ஐ.யினர் நேற்று (11/07/2020) காலை 11.00 மணிவாக்கில் அருகிலுள்ள சாத்தான்குளம் வந்தனர். அங்குள்ள ஜெயராஜின் வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்திவிட்டுப் பின்னர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகி அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.