கடந்த 2020- ஆம் ஆண்டு ஏப்ரல் 7- ஆம் தேதி, ஊரடங்கு அமலில் இருந்தபோது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கிருஷ்ணாபுரம் தெப்பக்குளம் அருகே, கபடி போட்டியில் மாநில அளவில் பதக்கம் பெற்ற கல்லூரி மாணவரான தாமரைக்கனி, மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முதல் குற்றவாளியான, தி.மு.க. 13- வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன், தமிழ்ப் புத்தாண்டான இன்று (14/04/2021) சேத்தூர் கரையடி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஏன் கொலை செய்யப்பட்டார்?
கல்லூரி மாணவர் தாமரைக்கனி கொலை வழக்கில், அண்ணாமலை ஈஸ்வரன், அவருடைய மகன்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார் அண்ணாமலை ஈஸ்வரன். இவர் தி.மு.க. கவுன்சிலர் என்பதால், தி.மு.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் இவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என, அந்தப் பகுதியில் இந்தத் தேர்தலில், சமுதாய வாக்குகள் வேறொரு முக்கியக் கட்சிக்கு மாறி விழுந்துள்ளன. ஆனாலும், அண்ணாமலை ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லையென்றும், பழைய பகைதான் காரணம் எனவும் பேசப்படுகிறது.
பழிக்குப்பழியா? வேறதுவும் முன்விரோதமா? என்ற கோணத்தில் சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.