
கோவையைச் சேர்ந்தவர் 22 வயதான சூர்யா. இவருக்கும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி(20) ஒருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ஒரு நாள் கல்லூரி மாணவியை போனில் தொடர்புகொண்ட சூர்யா, அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, ‘இதெல்லாம் எனக்கு செய் ஆகாது..’ என்று கூறி போனை கட் செய்துள்ளார். இருப்பினும் விடாத சூர்யா, கடந்த 14 ஆம் தேதி கல்லூரி மாணவியிடம் நேரடியாகச் சென்று, ‘உன்னை எனக்குத் திருமணம் செய்து கொள்ள ஆசை. நீயும் என்னைத் தான் காதலிக்க வேண்டும்...’ என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது சகோதரர் பிரவீனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பிரவீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூர்யாவை, ‘இனி என் சகோதரியின் பக்கம் வரக்கூடாது..’ என்று கண்டித்துள்ளார். அப்போது பிரவீனின் நண்பர் தருண் என்பவர் சூர்யாவை கடுமையான சொற்களால் எச்சரித்ததாக தெரிகிறது. இதனால், சூர்யாவின் கோவம் தருண் மீதும் திரும்பியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(20.3.2024) பிரவீன் கல்லூரி செல்வதற்காக போத்தனூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு தனது நண்பர்களுடன் வந்த சூர்யா, பிரவீனை காரில் கடத்திச் சென்றிருக்கிறார். அதன்பிறகு மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, “உனது சகோதரனை கடத்திவிட்டேன். நான் உன்னைக் காதலிக்கிறேன்; அதனால் நீ என்னைத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்; இல்லையென்றால், உன் சகோதரனை கொன்று விடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார். அதன்பிறகு மீண்டும் மாணவியை தொடர்பு கொண்ட சூர்யா, ‘பிரவீன் நண்பர் தருணை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்து விட்டு உனது சகோதரனை அழைத்துச் செல்’ என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து மாணவி, தருண் மற்றும் அவரது நண்பர்கள் செட்டிபாளையம் வந்துள்ளனர். அங்கு காரில் வந்த சூர்யா, தருணை தங்களது காருக்கு அனுப்பி வைக்குமாறு மாணவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாணவி, சூர்யாவிடம் போனில் கத்தியுள்ளார். இதைக்கேட்டு ஓடிவந்த பக்கத்தினர் பார்த்த சூர்யா, பிரவீனை அங்கேயே இறக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து மாணவி தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சூர்யாவுடன் அவரது நண்பர்களான சங்கர்(21), திருமுருகன்(21), கலையரசன்(19) ஆகியோரும் சேர்ந்து பிரவீனை கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். மேலும், நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீஸ் தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடி வருகின்றனர்.
பெண்ணின் சகோதரனை கடத்தி வைத்துக்கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.