
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் ஒன்பதாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (5/1/2022) கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை (6/10/2022) வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழக கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்திற்கு சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.