Skip to main content

மழை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
Rain echoes; Notification of holidays for schools and colleges in three districts

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்தது. பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.

29 இடங்களில் அதி கனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 128 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த மூன்று மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். நாளை (14/11/2024) தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை எதிரொலி காரணமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (14/12/2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதால் நாளை தென்காசி, திருநெல்வேலி  மற்றும் தூத்துக்குடியில் கல்வி நிறுவனங்களில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என நெல்லை , தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்