சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகரின் தண்ணீரை விற்ற எஸ்.பி. வேலுமணி, சென்னை நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டதையும் சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முயற்சித்ததை ஆவணங்களோடு வெளிப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் சென்னை நெமிலியை பற்றி மேலும் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. எந்த நிலையிலும் தமிழகத்தின் தண்ணீரை விற்காமல் ஓய்வதில்லை என்று முடிவெடித்து உள்ளது தெரிகிறது.
![sp velumani](http://image.nakkheeran.in/cdn/farfuture/gGUAj294B7htGyVL0EV2NPPWOyzHm12y6NrphAkqnmo/1555301142/sites/default/files/inline-images/sp-velumani_0.jpg)
கடந்த மாதம் டெண்டர் படிவம் பிரித்த போது முதலில் கன்சல்டன்சி நிறுவனத்தின் மறு டெண்டர் கோரிக்கையை ஏற்காத சென்னை பெருநகர குடிநீர் நிறுவனம் அதே கன்சல்டன்சி நிறுவனத்தின் அறிக்கைகளை சுட்டிகாட்டி IDE & VA TEC நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்து மற்ற மூன்று நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளியை மட்டும் திறக்கிறது. அதில் குறைந்த அளவு டெண்டர் கொண்ட அசேனியா நிறுவனம் ரூ. 1500.83 கோடி, கோப்ரா டெக்டரான் நிறுவனம் ரூ.1691 கோடி, சூயஸ் நிறுவனம் ரூ. 2327.25 கோடி என விலை கேட்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல் ஏலதாரருக்கும் இராண்டாம் ஏலதாரருக்கும் உள்ள வித்தியாசம் ஏறத்தாழ ரூ. 191 கோடிகள் இரண்டாம் ஏலதாரருக்கும் மூன்றாம் ஏலதாரருக்கும் வித்தியாசம் ரூ. 600 கோடி.
இவ்வளவு பெரிய விலை மாற்றங்கள் நிகழ ஒற்றை காரணம், ஊழல் மட்டுமே. வேலுமணியின் திட்டம் முழுவதுமாக இந்த டெண்டர் திறந்தவுடன் தோல்வியடைந்தது. காரணம் ரூ. 1500.83 கோடிக்கு கேட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்த பணிகளை தருவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அமைச்சர் தரப்பு மிரட்டலால், அசேனியா நிறுவனம், டாலர் உயர்வு மற்றும் கால தாமதத்தால் மூலப் பொருட்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களை காட்டி டெண்டரில் இருந்து பின்வாங்குகிறது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி அமைச்சர் தரப்பு காய் நகர்த்த தொடங்குகிறது. ஏற்கனவே ஊழல் வழக்குகளில் சிக்கிய கோப்ராடெக் நிறுவனம் சி.பி.ஐ விசாரணையில் உள்ள நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க கூடாது, தள்ளுபடி செய்யவேண்டும என்று வழக்குகளை காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கினை சூயஸ் நிறுவனம் தொடங்கியது.
டெண்டர் விதி முறைகளின் படி வருடத்திற்கு ரூ. 800 கோடிகள் வரவு செலவுகள் உடைய நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கெடுக்க முடியும். ஆனால், கோப்ரா டெக் நிறுவனத்தின் வருடத்தின மொத்த வரவு செலவே ரூ. 300 கோடிகள்தான். ஆனால், பிற நிறுவனங்களை இணைத்து வருடத்தின் வரவு செலவாக ரூ. 800 கோடிகளை காட்டுகிறது. எனவே அடிப்படையிலேயே தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கன்சல்டண்ட நிறுவனம் தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் சூயஸ் நிறுவனத்தின் வழக்கில் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனையடுத்த முதல் ஏலதாரர் குறிப்பிட்ட தொகையான ரூ. 1500.83 கோடிகள். ஆனால், இரண்டாம் ஏலதாரரான கோப்ராடெக் தெரிவித்துள்ள தொகையுடன் முதல் ஏலதாரரின் ஏலதொகையை ஒப்பிட்டும்போது அது ரூ. 191 கோடி அதிகம். எனவே ஒப்பந்த புள்ளிகள் சட்டத்தின்படி ஒரு மெட்ரோ வாட்டர் நிறுவனம் இரண்டாவது ஏலதாரரை அழைத்து முதல் ஏலதாரரின் தொகையில் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து பணிகளை வழங்க வேண்டும். ஆனால், கோப்ரா டெக் நிறுவனம் 28.3.2018 அன்று ஒரு இணையதளம் மூலமாக எங்களால் ரூ. 1691 கோடி ரூபாய்க்கு குறைவாக இந்த பணிகளை செய்யமுடியாது என்று ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். சர்வதேச டெண்டர்களில் இது மிகப்பெரிய சட்டவிதி மீறல்.
இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த நிறுவனம் கட்டாயமாக தகுதி இழப்பு செய்ய வேண்டும். ஆனால், கோப்ரா டெக் நிறுவனத்தின் உரிமையாளர் பங்குதாரராக இருக்கும் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் சென்னை பெறுநகர குடிநீர் வாரியத்தின் இயக்குநர், நிதிச்செயலாளர், சகிதமாக ஒரு பெரிய சந்திப்பு நடத்தி அதில் தேவையான அதிகாரிகளுக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்தவுடன் எந்த ஒரு சட்ட ரீதியான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிகையும் இல்லாமல், மெட்ரோ வாட்டர் நிறுவனம் கோப்ராடெக் குறிப்பிட்ட விலையான ரூ. 1691 கோடிகளுக்கு டெண்டரை கொடுத்திருப்பதன் மூலம் ரூ. 191 கோடி ரூபாயை அரசு நேரடியாக இழக்கிறது.
இது தவிர 20% டெண்டர் சட்டத்தை பயன்படுத்தி மேலும் ரூ. 330 கோடிகள் அதிகமாக கோப்ராடெக் நிறுவனத்திற்கு தருவாதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வருகிறது. அப்படி பார்த்தால் ரூ. 521 கோடி ரூபாய் அளவிற்கு மிகப்பெரிய ஊழல் நடப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
![sp velumani](http://image.nakkheeran.in/cdn/farfuture/gyJcPwcgKPe8g4GpCteppS9BQwBhc7jsStd7-HCtWa4/1555301176/sites/default/files/inline-images/protest_17.jpg)
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த டெண்டரை இரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும். புதிய நிறுவனங்கள் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான கன்சல்டிங் நிறுவனமே மறு டெண்டர் கோருங்கள் என்று அறிவித்தும் வேலுமணியின் பேராசையால் ஒட்டுமொத்தமாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வீணாக போகிறது. கடல் நீரை முழுமையாக சுத்திகரித்து முறையாக வழங்காவிட்டால் பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு ஊழல்களை செய்த ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்த பணிகளை வழங்கினால் ஏற்படும் விளைவுகளால் இந்த திட்டமே வீணாகிவிடும் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த டெண்டரை இரத்து செய்யாமல் ஓய மாட்டோம் என மார்க்சிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா