தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல இடங்களில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 16ந்தேதி மாலை வேலூர் மாவட்டத்தில் மழை தொடங்கியது. அப்போது தொடங்கிய மழை ஆகஸ்ட் 17ந்தேதி காலை 8 மணி வரை கொட்டி தீர்த்தது.
சுமார் 12 மணி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 107 மி.மீட்டர் அளவு பெய்துள்ளது. வேலூர் மாநகரத்தில் மட்டும் 165 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்த மழையால் இன்று ஆகஸ்ட் 17ந்தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
அதோடு, ஆசியாவின் பிரபலமான மருத்துவமனையான சி.எம்.பி மழை நீரால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் பல கல்லூரிகளும், பள்ளிகளுக்குள் மழை நீர் புகுந்து 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
தனியார் நிர்வாகங்கள், மின் மோட்டார்களை கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றன. அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி கல்லூரிகள் அதனையும் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.
பாலாற்றங்கரை ஒரம் குடியிருக்கும் பலரும் மழை நீர் புகுந்து மக்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகின்றனர். அதோடு, காலையில் இருந்து தற்போது வரை மழை பெய்து வருவதால் வேலூர் மாவட்டம் தவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேலூர் மாநகரம் தவிக்கிறது.