திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் இன்று (08.03.2021) புதிதாக ‘லாரி புக்கிங் சென்டர்’ தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திறக்கப்பட்டது. இந்தப் புதிய அலுவலகத்தில், பணியாற்றிக்கொண்டிருந்த பழைய தொழிலாளர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், அதில் ஏற்கனவே பணிபுரிந்துவந்த திருச்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் புதிய புக்கிங் சென்டரை அடித்து உடைத்துள்ளனர்.
ஒருசில நிர்வாகிகளைத் தாக்கியும் உள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் வியாபாரிகள் சங்க பேரமைப்பினர். அதுமட்டுமின்றி, தற்போது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய சி.ஐ.டி.யூ.வை, திமுக தலைவர் உடனடியாக கூட்டணியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போதிலிருந்தே இவர்களுடைய அராஜகம் தொடங்கிவிட்டதாகவும், இது நாளைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமையும் என்பதையும் முன்னிறுத்தி இந்த சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் அனைத்து கடைகளையும் மூடி அவர்களுக்கு எதிராக எங்களுடைய பலத்தைக் காட்டுவோம் என்று தெரிவித்துள்ளனர்.