பெட்ரோல், டீசல் விலை உயா்வு என்பது நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிறது. கடந்த 3 மாதங்களில் 54 முறை விலை ஏறியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய பாஜக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்துவருகிறது. கரோனா நேரத்தில் இந்த விலையேற்றம் மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் சார்பில் தொடா்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் குமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக காங்கிரஸ் சார்பில் நேற்று (12.07.2021) சைக்கிளில் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டா் அலுவலகம் வரை சைக்கிளில் சென்று காங்கிரஸ் கட்சியினர்கள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்காததால், தடையை மீறி கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அதை தடுத்து நிறுத்திய போலீசார் எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரசாரை கைது செய்தனா்.