
உக்ரைனில் மருத்துவப்படிப்பிற்காகச் சென்ற மனோ ஜெபத்துரையின் தந்தை நெல்லையின் பாளையைச் சேர்ந்த சேகர் செல்வின் மாற்றுத்திறனாளி, பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அமுதா. இவர்களின் ஒரே மகன் மனோ ஜெபத்துரை மற்றும் 2 மகள்கள். கடந்த டிசம்பர் மாதம் தன் சகமாணவர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த 7 மாணவர்களுடன் உக்ரைனிலிலுள்ள கார்க்யூ நகரின் கார்க்யூ நேசனல் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவ படிப்பிலிருக்கும் முதலாமாண்டு மாணவன்.
தற்போது ரஷ்யா தனது கொடூரக் கொடுக்குகளால் குண்டு மழையால் உக்ரைனை சிதைத்துக் கொண்டிருக்கிறது. தங்களது பிள்ளைகளை உயிருடன் பார்ப்போமா என்ற பதை பதைப்பிலிருக்கிறார்கள் பெற்றோர்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சேகர் செல்வினின் குடும்பம் மகன் உயிருடன் திரும்புவானா என உறக்கமற்று சுருண்டு போயிருக்கிறார்கள். அவர்களை நாம் சந்தித்த போது மகன் பற்றிய நினைப்பில் கண்ணீரும் கவலையுமாயிருந்தார்கள். தவிப்பிலும் நம்மிடம் மன துயரத்தைக் கொட்டினார்கள்.

“என் மகன் நாகர்கோவிலில் படிக்கும் போதே சகமாணவர்களோடு உக்ரைன் நாட்டுக் கல்வித்தரம் பற்றிக் கேள்விப்பட்டு அங்குள்ள கார்க்யூ நேசனல் மெடிக்கல் கல்லூரியில் நாகர்கோவில் மாணவர்கள் ஏழு பேருடன் கடந்த வருடம் டிசம்பரில் தான் சேர்ந்தான். ஐந்து வருடப்படிப்பு அங்கிருந்து தலைநகர் கீவ் அரைமணி நேரப் பயணம். அங்குள்ள மெடிக்கல் கல்லூரியின் படிப்புச் செலவு மட்டுமல்ல மற்ற நாடுகளை ஒப்பிடும் போது உக்ரைனில் செலவு ரொம்பவும் குறைவு. கல்வியில் உலக தரம் வாய்ந்தது. அங்கே விஞ்ஞான கல்விகளுக்கு முன்னுரிமை. பல சயின்டிஸ்ட்களை உருவாக்கியுள்ளது. அதோடு இங்குள்ளதை விட உக்ரைனில் அன்றாட வாழ்க்கைச் செலவும் குறைந்த அளவு தான் பிடிக்கும் பல வகையிலும் மாணவர்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்திற்கான செலவினம் சொற்ப அளவில் கட்டுபடியாகுபவை. அடித்தட்டு மக்களுக்கு ஏற்ற சௌகரியமான நாடு உக்ரைன்.
ஐாயிண்ட் பண்ணப்புறம் மகன் என்ட்ட பேசுவான். அந்தக் கல்லூரியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் சிங்கப்பூர் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் படித்து வர்றாங்க. இதுக்கு இடையில போர் பற்றிய பேச்சு கிளம்பிய உடனேயே பதட்டமாயிட்டாக. இவங்க ஏற்பாடுகளப் பண்ணிட்டிருக்குறப்பவே ரஷ்யா தாக்குதலை ஆரம்பிச்சிருச்சி. கல்லூரி நிர்வாகம் மாணவர்களைப் பாதுகாக்க ஆரம்பிச்சிட்டாக.
போர் ஆரம்பிச்சு குண்டு போட்டுத் தாக்குனதுமே, மக்கள் பதுங்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பதறிப்போன நா எம் பையன்ட்டப் பேச ஆரம்பிச்சேன் தொடர்பு கெடைக்கல. இன்னக்கி மத்தியானம் அவன் செல்லுல என்ட்ட பேசும் போதே அவன் இருக்கிற பகுதியில பாம் போடுற சத்தம் எனக்கு கேட்டுச்சி. கொல பதறிப் போனோம்யா. யப்பா குண்டு தொடர்ச்சியா இந்தப் பக்கம் போடுறாங்கப்பான்னு அழுதுகிட்டே பையன் சொன்னப்ப, நா கதறிட்டேம்யா. அவனும் பதட்டத்திலருந்தான். சாப்பிட்டியா, பாதுகாப்பா யிருப்பான்னு அழுதுகிட்டே சொன்னேம். நாங்க பாதாளப் பதுங்கு குழியில் பாதுகாப்பத்தானிருக்கோம். எந்த நேரம் என்ன நடக்கும்னு தெரியலப்பா. மக்கள்லாம் கூட்டம் கூட்டமா பாதாள ரயில் ஒடுற பாதாளப் பகுதியில உசுரக் கையில புடிச்சிட்டிருக்காங்கான்னு சொன்னாம். ஒடனே போன் தொடர்பு கட்டாயிறுச்சி. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால கட்டப்பட்ட அந்தக் கல்லூரி படிக்கிற மாணவர்களுக்கு ரொம்பவும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட வகையிலும், பாதாள அறைகளை அமைச்சுக் கட்டியிருக்காங்களாம். அது ரொம்ப பாதுகாப்பாயிருக்குன்னும் அதுலதாம் முடங்கிக் கிடக்கோம்னு சொன்னாம்.
அதுக்குப்புறம் அவன்ட்டயிருந்த கால் வந்திச்சி அவன் சொன்னதக் கேட்டு ஆடிப் போயிட்டேம்யா. இந்திய மாணவர்கள மீட்பதற்கு எம்பசி வேலை செய்யுதாம்.

என்ட்டப் பேசுன நெல்லை கலெக்டர் ஒங்க பையன மீட்டுக் கொண்டு வர வேலைகள் நடக்குன்னு சொன்னாக. போர் பதட்டம் ஆரம்பிச்ச ஒடனே கொஞ்சப் பேரு குமேனியா வழியா நாலு நாடுகளைச் சுத்தி அஞ்சு நாளுக்கப்புறம் வந்திருக்காங்க. வழக்கமா ஒரே நாள் பயணப் பிளைட் சார்ஜ் 28,000 ஆனா போர் உக்ரத்தில் வெளியேற 60,000 ப்ளைட் சார்ஜ் ஆகியிருக்காம்.
எம் பையன் உசுரோட வருவானான்னு நெனைச்சி நெனைச்சி அன்னம் தண்ணி உறக்கமில்லாமக் கெடக்கேம்யா. வேற வழி தெரியாத நாங்க ஆண்டவம் மேல பாரத்த வைச்சிட்டோம்” என்றார். கண்ணீர் கசிய அடி வேதனைக் குரலில்.